Friday, 22 April 2016

கவிதையான கவிதை

ஒருவர்: 

தன் பார்வையை 
பிறர் விழிகளில் நுழைப்பது... 

தன் சிந்தனைகளை 
பிறர் மூளைக்குள் ஏற்றுவது... 

தன் எண்ணங்களை 
பிறர் மனதில் விதைப்பது... 

தன் மொழியை 
பிறர் இதழில் சேர்ப்பது... 

தன் சுவடுகளை 
பிறர் வழியில் பதிப்பது... 

அர்த்தம் புரியும்போது தான் 
வார்த்தைகள் கூட 
கவிதையாகின்றன....!! 

படைப்பவன் கவிஞனாகிறான்! 
ரசிப்பவன் கலைஞனாகிறான்!! 

கவிதையை பொருத்தமட்டில் 
இருவரும் சமமே....!!

அமைதி காக்க

அமைதியை காக்க வேண்டி 
அரும்பாடுபட்டு அனுமதியுடன் 
படைதனை அமைத்த பின்பு 
பயன்பெறும் வகையில் பயணிகளை 
பாதுகாப்பு சோதனை செய்தபின் 
பறப்பதற்கு அனுப்பும் கால் 
பகைவனும் அனுமதி பெற்று 
பறந்து பாமரர்களை அழிக்க 
பாரினில் நிகழும் இக்கொடுமை 
பயம்தனை மனதில் தூண்டி 
பரமன் அருள் வேண்ட மனம் விழையுதே

தமிழ் கவிதைகள்

தமிழ் கவிகள் 
ஒவ்வொருவரும் 
தெரிவிக்கும் கருத்துக்கள் 
ஆயிரம் ஆயிரம்! 

எரியும் விளக்கின் 
எண்ணையை போலதாம் அவைகள்! 
இருள் சூழ்ந்த நம் வாழ்வில் 
சுடர்ஒளி பரவிட துணை நிற்பவை! 

தமிழனை ஆட்சி செய்ய 
தமிழன் அவசியம் இல்லை! 
தமிழ் மொழியும் 
தமிழர்தம் மரபும் அறிந்திடல் வேண்டும்! 

சிந்தையினில் பாரதியின் வரிகளை 
இந்த வேலையினில் மறவோம் 
சாதிகள் இரண்டே! ஒன்று 
மேலோர் மற்றொன்று கீழோர்! 

நீதிநெறியிலின்று பிறர்க்கு உதவும் 
நன்னெறி கொண்ட மேலோர்களை 
தலைவர்கள் ஆக்குவோம்! 
கீழோர்களை ஒதுக்குவோம்!

வாழ்த்து

தமிழ் தொன்மையானது

தமிழர் தொன்மையானவர்

ஞானிகளின் பிறப்பிடமாய்
அப்துல்கலாம் அய்யா வரை
இருந்துவரும் தமிழகம்
தமிழின் அடையாளம்

அந்த தமிழுக்கும் வயது
கூடுவதை
ஆண்டின் முதல் நாளை
புத்தாண்டாய்

பூரித்து கொண்டாடும் 
புதிய சிந்தனைகளின் தொகுப்பாளர்கள் 
தமிழர்களுக்கு 

உலகம் கடந்து
வாழும் உரிமைகளுக்கு

இதயம் கனிந்த 
தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு

நாம் பிறந்தது நம் பெற்றோருக்கு பெருமை 
அதே போல் 
நம் தமிழ் பிறந்தது நமக்கு பெருமை 

என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

தமிழ் மொழி

ஆறு கோடி 
மக்களின் தாய்மொழி 
அறு சுவையை 
மிஞ்சுகின்ற வாய்மொழி 

அகரத்தில் தொடங்கும் சிகரமொழி 
தகரத்தை தங்கமாக்கும் லகரமொழி 

அகத்தியன் கண்ட அமுதமொழி 
தமிழன் அகத்தினுள் கொண்ட குமுதமொழி 

ழ விற்கு பக்கத்தில் 
க வரிசை கொண்ட தனிமொழி 
க வை மெய்யாய்க் 
கனியவைக்கும் கனிமொழி 

சொற்சாலத்தால் மயங்கவைக்கும் மதுமொழி 
கல்தொன்றும் முன்தோன்றிய முதுமொழி 

வள்ளுவன் வார்த்தெடுத்த குரள்மொழி 
வல்லினத்தை வளர்த்தெடுக்கும் குரல்மொழி 

ஔவையார் பார்த்தெடுத்த வளர்மொழி 
அங்கவை கோர்த்தெடுத்த மலர்மொழி 

மதுரைச் சங்கத்தில் 
குடியிருக்கும் வான்மொழி 
மலரின் அங்கத்தில் 
குவிந்திருக்கும் தேன்மொழி 

உலகத்து மொழிகளின் செம்மொழி 
இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ? 

தமிழுக்காக தலைவணங்கும் என் சிரம் 
தமிழ் வளர என் உடல் ஆகட்டும் உரம் ..

உயிர் தமிழ்

அழகு பொங்கும் தமிழை எழுதும் போது 
ஆசை வெளிப்படும் தாய்மொழியை ஓதும் போது 
இலட்சியம் உடையாமல் திடமாகும் 
ஈழத்தை தீயிலிருந்து காக்க வேண்டி… 
உயிரை இழக்கும் துயரம் வந்தாலும் 
ஊர் சேர்ந்து தூரம் எரிவோம் துரோகிகளை… 
எண்ணங்களை தெளிவாய் இணைத்து 
ஏணியாக்கி தேசத்தைக் காப்போம்… 
ஐயம் இன்றி வாழ்ந்து தைரியம் வளர்ப்போம்… 
ஒற்றுமையாய் வாழ்ந்து தொல்லைகளை (திவிரவாதத்தை) ஒழிப்போம். 
ஓகோ என கலாச்சாத்தோடு வாழ்வோம் 
அஃதே தமிழர் என்றுச் சொல்லி…

தமிழோடுதான் நான் வாழ்வேன்

கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும் 
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும் 
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப் 
பண்ணோடு தான்நான்வாழ் வேன் 

---கவின் சாரலன் 
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா 

ஈற்றடியை சற்று மாற்றி இப்படியும் படிக்கலாம் 

கண்ணோடு தான்காதல் மெல்லவே பூத்திடும் 
மண்ணோடு தான்மரு தம்தழைத் தோங்கிடும் 
விண்ணோடு தான்வெண் ணிலாஉலாவும் செந்தமிழ்ப் 
பண்ணோடு தான்நான் எழுதும் கவிதமிழ் 
பெண்ணோடு தான்எனது வாழ்வு 

----இது ப ஃ றொடை வெண்பா என்பதை நீங்கள் அறிவீர்கள்

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழச்சியே

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழச்சியே 
நீவிர் தமிழாக 
தமிழ் போற்ற 
தரணி புகழ 
அழகு தமிழ் மொழிகொண்டு 
கருத்த விழிவந்து 
தமிழரசியை 
தமிழ்ப் பாவையாய் 
அழகு நங்கையை 
அண்டம் முழுதும் 
புகழ் பெற்று 
என் தாய் போல் நீடுழி வாழ்க வளமுடன்

மனம் மாறுமோ

மனம் மாறுமோ 

பட்டு புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக ஆவதுண்டு 
பட்ட மரங்கள் பசுந்துளிர் எடுப்பதுண்டு 
பச்சிளம் குழந்தைகள் பாவைகளாக மலர்வதுண்டு 
பயனற்ற நிலங்களும் பசுமையான வயல்களாவதுண்டு 
பஞ்சுப் பொதிகளும் பலமுள்ள ஆடைகளாவதுண்டு 
பதித்த மனித கால்களால் பாதைகள் அமைவதுண்டு 
பகலவன் வருகையால் பனித்துளிகள் விலகுவதுண்டு 
பணிசெய்த மரங்களால் பயனுள்ள பொருள்களைக் காண்பதுண்டு 
பல ஸ்வரங்களின் கோர்வையால் பாடல் உயிர்பெருவதுண்டு 
பரமனின் அருள்கொண்டு பாலினம் உதிரத்தை பாலாக்குவதுண்டு 
பகுத்தறிவுள்ள மனிதனின் மனம்மட்டும் தான் ஏன் மாறுவதில்லை ? 

மனம் மாறுமா!!